தனது 71 வது அகவையில் தடம் பதிக்கும் ஈழத்து மெல்லிசை மண்ணர் என பெயர்பெற்ற திருகோணமலை பரமேஸ் கோணேஸ் சகோரர்களில் ஒருவரான திரு M P கோணேஸ் அவர்களுக்கு இனிய பிறந்ததின நல்வாழ்த்துக்கள்

 

 

இசையால் வளர்ந்து ஒலிபரப்பில் முதிர்ந்த உயிர்ப்பான கலைஞன் .. திரு M P கோணேஸ்..

பரமேஸ் கோணேஸ். இந்தப் பெயர் எழுபதுகளில் இலங்கையின் இசைத்துறை வட்டாரங்களில் மிகப் பிரபலமானதாகவும் தனித்துவமானதாகவும் திகழ்ந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

மெல்லிசைக்குழு என்பதையும் கடந்து சொந்த ஆக்கங்களை (பாடல்களை) தமிழில் உருவாக்கி முதன்முதலில் இசைத்தட்டாக்கியவர்கள் என்ற பெருமைக்குரியவர்கள் இவர்கள்.

1971ஆம் ஆண்டு திருகோணமலையைத் தளமாகக் கொண்டு பரமேஸ் கோணேஸ் என்ற பெயரில் இலங்கை முழுவதும் மெல்லிசை நிகழ்ச்சிகளை மேடையேற்றி நடத்தி வந்தவர்கள் பரமேஸ் கோணேஸ் இசைக்குழுவினர்.

இருந்தாலும் சொந்தமாக பாடல்கள் இசைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நம்பிக்கையுடன் பாடல்களை எழுதி இசையமைத்து அதனை இசைத்தட்டில் பதிவு செய்து மக்களை இரசிக்கச் செய்ததுடன் வியாபார ரீதியிலும் வெற்றி பெற்றுக் காட்டியவர்கள் இவர்கள்…

இந்த இசைத் தட்டில் இடம் பெற்ற உனக்குத் தெரியுமா நான் உன்னை அழைப்பது,?போகாதே தூரப் போகாதே மற்றும் எங்கே நிம்மதி பாடலின் சாயலில் நிறைய இசைக்கருவிகளைப் பயன்படுத்தி உருவான அழைக்கும் ஓசை கேட்கலையா போன்ற பாடல்கள் இரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவை வரலாறு.

இந்தப்பாடல்கள் அந்நாட்களில் இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பாகியமையே அதற்குச் சான்றாகும்.

இந்தப் பாடல்களுக்கான வரிகள் பரமேஸ் அவர்களாலும் இசை கோணேஸ் அவர்களாலும் வழங்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் 1971ஆம் ஆண்டு முதல் 1976ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிகளில் இலங்கையின் மூலை முடுக்கெல்லாம் இவர்களின் மேடை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இசை மேடைகள் எல்லாம் தேனிசை கானங்களால் நிரம்பி வழிந்தன.

திரைப்படப் பாடல்களை மட்டுமே வழங்கி வந்த ஏனைய இசைக்குழுக்களிலிருந்து வேறுபட்டு வித்தியாசமாகச் சொந்தப் பாடல்களையும் சேர்த்து வழங்கும் தனித்துவமான இசைக்குழுவாக பரமேஸ் கோணேஸ் இசைக்குழுவினர் திகழ்ந்தனர் என்று சொன்னால் அது மிகையாகாது.

சர்வதேசப் புகழ் பெற்ற இசைக்கலைஞராக ஆரம்பத்தில் இலங்கையில் இருபத்தைந்து ஆண்டுகள் பவனி வந்த கோணேஸ் அவர்கள் அடுத்த இருபத்தைந்து ஆண்டுகள் கனடிய மண்ணில் இசையுடன் ஒலிபரப்புத்துறையும் கலந்த ஊடகவியலாளராக மக்கள் மத்தியில் மதிப்புப் பெற்றவர்..

தென்றல் வீசும் மட்டுநகரில் தமிழ்ப் பேரறிஞர் சுவாமி விபுலாநந்தரின் மாணவரான பீதாம்பரம் – பொற்கொடிநாயகி தம்பதிகள் இவரது பெற்றோர்கள்.

சாவகச்சேரி கோணேஸ் அவர்களின் பிறந்தகம்.

தாய்மொழியிலும் தமிழிசையிலும் தந்தைக்கிருந்த அளவற்ற பற்று கல்லூரியில் கல்வி கற்கையிலேயே ஆசிரியர் வினாசித்தம்பியிடம் கர்நாடக இசையைக் கற்க வைத்தது.

பருவம் பதினாறாக இருக்கையில் இளைஞர் கோனேஸ்சின் மனது இசையின்பால் முழுமையாக ஈர்க்கப்பட்டது.

தமது சகோதரர் பரமேஸுடன் இணைந்து ஏழு பெர் கொண்ட இசைக் குழுவொன்றை பாடல் பெற்ற தலமுமான திருகோணமலையில் பரமேஸ் கோணேஸ் எனும் பெயரில் உருவாக்கினர்.

வெறுமனே சினிமாப் பாடல்களை மட்டும் மேடைகளில் வழங்குவதை விரும்பாது மண்ணையூம் மக்களையூம் முன்னிறுத்தி புதுப்புதுப் பாடல்களை புதிய மெட்டுக்களில் வழங்க ஆரம்பித்தார்.

யாழ்பாடி யாழ்ப்பாணம்பெயர் கொண்டது|| என்ற புகழ் பெற்ற பாடலைத் தொடர்ந்து அடுத்தடுத்து இவ்வணியில் சேரும் பல பாடல்களை ரசிகர்களுக்கு வழங்கினார்.

பதினேழு வயதாக (1969) இருக்கையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தினகரன் விழாவில் இவர்களது குழு வழங்கிய இசை நிகழ்ச்சி பல்லாயிரம் மக்களின் வரவேற்பைப் பெற்றது.

அவ்வேளை ஈழத்துத் தமிழ் நாடக உலகின் தந்தை என மதிக்கப்பெற்ற கலையரசு சொர்ணலிங்கம் அவர்கள் இவர்களுக்கு..

( M P பரமேஸ், M P கோணேஸ், T. மகேஸ் )

ஈழத்து மெல்லிசை மன்னர் என்று பட்டம் வழங்கி மதிப்புடன் கூடிய அங்கீகாரத்தை வழங்கினார்.

1972ம் ஆண்டில் கொழும்பில் சிலோன் ஸ்ரூடியோவில் பகுதிநேரப் பணியாளராக இருந்து கொண்டு இசைத்துறையில் டிப்ளோமா பட்டம் பெற்றதோடு இலங்கை வானொலியையும் தம்வயப்படுத்த ஆரம்பித்தார்.

கொழும்பில் சரசவி ஸ்ரூடியோவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டு ஐந்து பாடல்களோடு வெளியான இவர்களது இசைத்தட்டே இலங்கையில் வெளியான முதலாவது தமிழிசைத் தட்டாகும்.

பின்னர் மலேசியா இந்தியா சிங்கப்பூர் நாட்டு வானொலிகளும் இப்பாடல்களை ஒலிபரப்புச் செய்தன. உனக்குத் தெரியூமா?| என்ற உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற பாடல் இந்த இசைத்தட்டில் ஒன்றாகும்.

1975இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இசையமைப்பாளர்களில் ஒருவராகி 250க்கும் அதிகமான பாடல்களுக்கு இசை அமைத்ததிருந்தார்..

1983ல் இனஅழிப்பு மற்றவர்களைப்போல கோணேஸ்சையும் புலம்பெயர வைத்தது.

ஜேர்மனிக்குச் சென்ற அவர் அங்கு தமிழர் புனர்வாழ்விற்காக பல எழுச்சிப் பாடல்களையும் எழுதி மெட்டமைத்து தமது மனைவி குழந்தைகளையூம் சேர்த்து அரங்கேற்றினார்.

அத்துடன் அங்கு தமிழ் ஆங்கிலம். பரதநாட்டியம் சங்கீதம் மற்றும் வாத்தியக் கருவிகளைக் கற்பிக்கவென ஒரு தமிழ்க்கல்லூரியை ஆரம்பித்து ஞாயிறு தோறும் அதனை நடத்தி வந்தார்.

மூன்று வருட ஆய்வின் பின்னர் சங்கீத முறைமையைத் தழுவி மேல்நாட்டு இசை வழியில் சர்வதேச சங்கீத சுரத்தட்டு என்னும் இசைப்பயிற்சி நூலை எழுதி வெளியிட்டது இவரின் மிகப் பெரும் சாதனை.

சென்னை இசைக் கல்லூரியில் இந்நூல் பார்வைக்கு வைக்கப்பட்டிருப்பது இவருக்குக் கிடைத்த வெற்றி மட்டுமன்றி ஈழத்தமிழருக்குக் கிடைத்த மிகப்பெரும் புகழாகும்.

மேற்கு ஜேர்மனியில் 1985ஆம் ஆண்டு கம்பியூட்டர் இசையை ஒலிப்பதிவிலும் மேடை நிகழ்ச்சிகளிலும் பயன்படுத்தியதன் மூலம் தமிழில் முதன்முறையாக கணினி வழியாக இசையைப் பயன்படுத்தியவர் என்ற பெருமையும் இவருக்கே உரியது.

ஜேர்மனியில் சுமார் இருபதுக்கும் அதிகமான இசை நிகழ்ச்சிகளை வெற்றிகரமான நிறைவேற்றிய இவர் 1990 மார்ச் மாதம் தமது குடும்பத்தோடு கனடாவில் நிரந்தரக் குடிவரவாளராக குடியேறினார்.

இவரது கனடிய வருகை இம்மண்ணில் தமிழிசைக்கு ஒரு புத்துணர்ச்சியையூம் மேடை நிகழ்ச்சிகளுக்கு ஒரு புத வடிவத்தையூம் வழங்கியது எனலாம். ஓர் இசைக்கலைஞராக தமிழுலகுக்கு நன்கு அறியப்பட்ட இவர் கனடாவில் ஒலிபரப்புத் துறையில் தனது பாதத்தைப் பதிக்க விரும்பினார்.

அதேசமயம் இருபத்துமூன்று இசைக்கலைஞர்களை இணைத்து முதன்முதலாக தமிழர்களின் இசைக்குழு ஒன்றையூம் இங்கு ஆரம்பித்தார்.

ரொறன்ரோவில் மட்டுமன்றி மொன்றியாலலின் பல இடங்களிலும் இக்குழுவின் நிகழ்ச்சிகள் நிகழ்ந்தேறின.

இலங்கையிலிருந்தும் இளங்கலைஞர் சிலர் இவர் குழுவில் வந்து இணைந்தது இவருக்குக் கிடைத்த பெருவெற்றியாகும்…

1990இல் வாரத்துக்கு 30 நிமிடங்கள் மட்டும் ஒலிபரப்பாகும் தமிழ் நிகழ்ச்சியே ரொறன்ரோவில் இடம் பெற்றிருந்தது.

1992லே திரு. ஞானேஸ்வரனுடைய அரைமணி நேர தமிழ் வானொலி நிகழ்ச்சி தேன் மதுரம்| என்ற பெயரில் ஆரம்பமானது. அதனையடுத்து இளையபாரதியின் சங்கமம், அரைமணி நேர தமிழ் வானொலி நிகழ்ச்சியும் தொடங்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக அமைந்ததே கோணேஸ்ஸின் ராகப்பிரவாகம் என்னும் அரைமணி நேர வானொலி நிகழ்ச்சி.

மூன்று முக்கியமான தமிழ் வானொலி நிகழ்ச்சிகள் சில வார வித்தியாசங்களில் ஆரம்பமாகி ரொறன்ரோ பெரும்பாகத்தில் வாழும் தமிழர்கள் மத்தியில் மகிழ்ச்சியையூம் வரவேற்பையும் ஏற்படுத்தி தமிழ் ஆர்வத்தை உருவாக்கின.

ஆனால் அரைமணி நேர நிகழ்ச்சிகள் என்பதாலும் அவைகளை எடுத்துச் சென்ற அலைவரிசைகள் தௌவற்றதாக இருந்ததாலும் கோணேஸ் திருப்தியடையவில்லை.

இதன் காரணமாக 1993ம் ஆண்டு 530 யூ அலைவரிசையில் வாரத்தில் ஏழு நாட்களும் இரவு எட்டு மணிமுதல் பத்து மணிவரை ரேடியோ ஏசியா| என்ற புது நிகழ்ச்சியை ஆரம்பித்து செய்திகளோட நாடகம் இசை ஆகிய நிகழ்ச்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார்.

இதனால் இவரது நிகழ்ச்சிகான மக்கள் ஆதரவு அதிகரிக்கத் தொடங்கியது.

இன்றுபோல மின்னஞ்சல் வசதிகளோ ஸ்கைப் வசதிகளோ செய்தி இணையத்தளங்களோ இல்லாத அந்தக் காலத்தில் ஏழு நாட்களும் ஒலிபரப்புச் சேவை நடத்துவது பெரும் சவாலாக இருந்தது.

இவரது மகன் பிரதீப் கோணேஸின் முயற்சியால் பிற்பகுதியில் ரேடியோ ஏசியா|வின் இருபத்திநான்கு மணிநேர தமிழ்ச்சேவை ஆரம்பிக்கப்பட்டது.

ஐரோப்பாவிலும் இச்சேவை வியாபிக்கப்பட்டதால் அங்கு ஒலிபரப்பான முதலாவது இருபத்திநான்கு மணிநேர தமிழ் வானொலிச் சேவை என்ற சிறப்பிடம் இதற்குக் கிடைத்தது.

அதேபோன்று ஒலிபரப்புத்துறையில் கூடிய நேரத்தை ஒதுக்க நேர்ந்ததால் இசைக்குழுவின் செயற்பாடுகளும் முடக்க நிலைக்குச் சென்றது.

வானொலி ஒலிபரப்பில் கோணேஸ் அதிக நேரத்தைச் செலவிட்டு அதற்கான ஒரு ஒலிக்கூடத்தையும் சொந்தமாக நிறுவி அந்தக் கலையகத்திலிருந்தே 1994ம் ஆண்டிலிருந்து நிகழ்ச்சிகளை வழங்க ஆரம்பித்தார்.

பொருளாதார ரீதியில் இவர்கள் எதிர்பார்த்தது வெற்றியளிக்கவில்லை.

இதனால் ஒலிபரப்பின் வழமையான செயற்பாடுகளில் அவ்வப்போது தடங்கல்கள் ஏற்பட்டன.

இருப்பினும் செய்தி வழங்கலிலும் சிறப்பு நிகழ்ச்சிகளிலும் கூடிய கவனம் செலுத்தப்பட்டது.

இதன் அடுத்த கட்டமாக இலங்கையிலிருந்து பிரபல்யமான தமிழ் கலைஞர்களை கனடா அழைத்து வந்து மேடை நிகழ்ச்சிகளோடு வானொலியூடாகவூம் பல சிறப்பம்சங்களை வழங்கும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கை வானொலிக் கலைஞர்கள் கே.எஸ்.பாலசந்திரன் வரணியூரான் எஸ்.எஸ்.கணேசபிள்ளை ஏஇஎம்.சி. ஜெயசோதி ஆகியோரை இங்கு வரவழைத்து ஒரே மண்டபத்தில் இரண்டு நாள் நிகழ்ச்சிகளை ரேடியோ ஏசியா நிகழ்த்தியது.

தாயக கலைஞர்கள் கலைநிகழ்ச்சிக்காக கனடாவூக்கு அழைக்கப்பட்ட முதல் நிகழ்வாக இது அமைந்ததோடு நுழைவூச் சீட்டின்றி நூற்றுக்கணக்கான ஆர்வலர்கள் திரும்ப நேர்ந்ததும் மறக்க முடியாதது.

1998ம் ஆண்டில் மொன்றியலில் 24 மணிநேர தமிழ் வானொலிச்சேவையை ஆரம்பிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

இவ்வேளையில் தான் 2001ம் ஆண்டு தமிழ்த் தொலைக்காட்சிச் சேவை ஒன்றை நடத்துவதற்கான அனுமதியையூம் இவர் பெற்றார்.

16000 சதுர அடி கொண்ட ஒரு கட்டிடத்தை ஒலி ஒளிபரப்புக்கு ஏற்றதாகப் புதுப்பித்து வேலை ஆரம்பிக்கப்பட்டது.

பலரது உதவி பல்வேறு வழிகளிலும் இதற்குக் கிடைத்தது.

எனினும் பொருளாதாரச் சிக்கல் தொடர்ந்து கொண்டேயிருந்தது.

இதனால் தொலைக்காட்சிச் சேவை நிகழ்ச்சியை தனியார் ஒருவருக்கு விற்க வேண்டிய நிலை கோணேஸிற்கு உருவானது எதிர்பாராதது.

இருப்பினும் கனடிய மண்ணில் முதலாவது 24 மணிநேர தமிழ்த் தொலைக்காட்சிச் சேவையை ஆரம்பித்த சாதனையாளர் என்ற பெயரும் கோணேஸிற்கே கிடைத்தது.

2014ம் ஆண்டு மொன்றியல் அலைவரிசையொன்றில் தமிழ் வானொலிச் சேவையை நடத்துவதற்கான அனுமதிய கோணேஸ் பெற்றார்.

2015 ஒக்டோபர் மாதத்திலிருந்து இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

கடந்த நாற்பது வருடகால கோணேஸின் கலை வாழ்க்கையில் உற்ற துணையாக இருந்து வரும் அவரது மனைவி பத்மினியும் பிள்ளைகள் பிரதீப் கோணேஸ் ராதிகா கோணேஸ் ஆகியோரும் தமிழ் மக்களால் நன்றிகூறப்பட வேண்டியவர்கள்.

கோணேஸ் அவர்களின் இருபத்தைந்து ஆண்டு கால இசைக்கலைப் பணியை வியந்து 1993ம் ஆண்டில் கனடா தமிழர் தகவல்| அதன் இரண்டாவது ஆண்டு விழாவில் சிறப்பு விருதுடன் தங்கப் பதக்கமும் வழங்கி கௌரவம் செய்தது.

அமைதியான சுபாவமும் ஆர்வத்துடனான விடாமுயற்சியும் கொண்ட அவரது ஆற்றலுக்கும் அக்கறைக்கும் அற்றுப்போகாத அபூர்வ சிந்தனைகளுக்கும் இணைவாக வசதியும் வளமும் அமைந்திருப்பின் அவரால் நிலையான மேலும் பல சாதனைகளை புகுந்த மண்ணில் நிலைநாட்டியிருக்க முடியும்.

அதற்காக காலம் இன்னும் அவரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

இசையில் வளர்ந்து ஒலிபரப்பில் உயிர்ப்பான கலைஞன் கோணேஸ் அவர்கள் நீண்டு வாழ்ந்து நெடிதுயர்ந்த சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்!

இவரது மூத்த சகோதரரான திரு M P பரமேஸ் அவர்களும் புலம்பெயர்ந்து தற்போது ஜெர்மனியில் வசிப்பதுடன் அவரும் தனது இசைப் பயணத்தை தொடர்ந்த வண்னம் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது…

Share this on